வெள்ளிக் கிழமை இரவு 8 மணி. தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் செல்வதற்காக ஒரு ஆட்டோவிற்கு காத்திருந்தோம் நானும் எனது தோழியும். சுமார் 2 கி.மீ இருக்கும் தொலைவிற்கு செல்ல எல்லா ஆட்டோக்கார அண்ணன்களும் கேட்ட தொகை 70 ரூபாய்க்கும் மேல்.
கடுப்பாகி எவ்வளவு குடுத்தாலும் போயிடலாம் என்று முடிவுக்கு வந்தோம். இந்த பொறுமையின்மையைத் தானே அவர்கள் உபயோகிக்கிறார்கள். அப்போது வந்த ஒரு அண்ணன் 60 ரூபாயில் நின்றார். "என்னண்ணா.. 50 ரூபாய்க்கு வாங்களேன்.. கொஞ்ச தூரம் தானே.." .. இரண்டு தடவை பேரம் பேசிய பின்னர் சரி என்று ஒத்துக் கொண்டார்.
எங்கள் அலுவலக நண்பரின் திருமண வரவேற்பென்பதால் நாங்கள் அதை காண உற்சாகமாக இருந்தோம். ஏற்கனவே சிலர் எங்களுக்காக காத்திருப்பதால் தான் அவசர அவசரமாக கிளம்ப வேண்டியிருந்தது.. சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோ அண்ணாவே பேச ஆரம்பித்தார்..
"அந்த ஏரியாவுக்கு 50 ரூபாய்க்கு எல்லாம் யாரும் வரதில்லைமா.. அண்ணா அண்ணானு ரெண்டு தடவை சொல்லிட்ட.. அதான் சரினு சொல்லிட்டேன்... "
பொதுவாகவே நான் ஆட்டோ ஓட்டும் அண்ணன்களை அண்ணா என்று அழைப்பதுண்டு. நெடு நாட்களாகவே இந்த பழக்கம் இருந்து வந்தது எனக்கு.
"ஏ ஆட்டோ" , "ஆட்டோக்கார்", "யோவ்" , "ஆட்டோ" என்று அழைக்கப்படும் அவர்களும் மனிதர்கள் தானே.. பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு ஆட்டோ வந்து நம் அருகில் வந்து நின்றால் நாம் காட்டும் எரிச்சல் எப்படி தாக்கும் அவர்களை என்று நான் வியப்பதுண்டு.
"போ யா .. " என்று சிலர் சொல்லுவர். ஏதோ விரட்டுவது போல் கை காட்டி மட்டும் விலக சொல்வர் சிலர். அந்த பக்கமே பார்க்காமல் இருப்பர், இல்லை.. ஒன்னுமே சொல்லாமல் பேருந்து வருகிறதா என்று எட்டி எட்டி பார்ப்பதுண்டு..
என்னால் முடிந்த வரை அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் போது எல்லாம் "இல்லைங்க .ஆட்டோ வேண்டாம்" என்று புண் சிரிப்போடு சொல்லி விடுவதுண்டு.. அப்படி சொல்வதினால் அவரும் கொஞ்சம் மரியாதையுடன் சென்று விடுவதுண்டு..
தேவைப்படும் போது, இரவுகளில், பேருந்து ஓடாத நாட்களில், பேருந்து போகாத இடங்களில் எல்லாம் ஆட்டோக்கார அண்ணன்களை விட நமக்கு உற்ற தோழர்கள் யாராக இருக்க முடியும்..
வேலூரில் இருந்த வரை ஆட்டோவின் அவசியம் அவ்வளவாக இருந்ததில்லை எனக்கு.. சென்னை வந்த பிறகு பல தருணங்களில் தனிமையில், இரவு நேரங்களில் செல்லும் சந்தர்ப்பம் ஏற்படும். அது தவிர்க்கவும் முடியாது. அது போல சமயங்களில் அவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களின் வாழ்க்கை முறைப் பற்றி தெரிந்து கொள்வதுண்டு.. அப்படிப் பட்ட உரையாடல்களில் இருந்து நான் உணர்ந்த சில விஷயங்கள்..
v உழைத்து சாப்பிடுபவர்கள் என்று எளிதாக உதாரணம் காட்டி விடலாம் இவர்களை. ஆட்டோ ஓட்டினா தான் காசு. உட்கார்ந்த இடத்திலேயெ தான் காசு கிடைக்குது. ஆனா .. அதுவும் கூட உழைப்பு தானே இவர்களுக்கு..
v நான் பேசிய, திருமணமான எல்லாரும் சொன்ன முக்கியமான வாழ்க்கை குறிக்கோள் "பசங்களை நல்லா படிக்க வைக்கணும்.. நான் தான் இப்படி அல்லாடறேன். என் பசங்க நல்லா படிக்கு பெரிய வேலை செய்யனும்"
v முக்கால் வாசி பேர் காதல் திருமணம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். அது எப்படி என்று என்னிடம் கேட்காதீர்கள். அடுத்த முறை நீங்கள் செல்லும் ஆட்டோவில் இதே கேள்வியை கேட்டுப்பார்க்கலாம்..
v பெரும்பான்மையான ஆட்டோக்காரர்கள் ஒரு கட்சியினை சார்ந்து இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. ஆட்டோக்கார அண்ணன்களிடம் தான் இந்த சங்கம் என்ற அமைப்பு இன்னும் முழுமையாக இருக்கிறது.
v போட்டி பொறாமை இல்லாமல், ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் ஒருவர் மாற்றி ஒருவராக சவாரி செல்வர். இதுவே ஒருவருக்கு அவசரமாக பண உதவி தேவைப்பட்டால் விட்டுக்கொடுப்பதும் உண்டு.
v பொதுவாக வீட்டில் இருந்து ஏதாவது சுமையான பொருட்களை எடுத்து செல்லும் போது, அதை சுமக்க நிச்சயம் ஒரு கை இருக்கும். அது ஆட்டோக்கார அண்ணன்களாக இருக்கும்
v ஏதாவது விபத்து / அசம்பாவிதம் நடக்குதா.. அங்க சுத்தி இருக்கும் 5 பேர்-ல இரண்டு பேர் ஆட்டோக்காரர்களாக இருக்க கூடும்.
v அது எப்படி என்று தெரிவதில்லை. எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் நான் செல்லும் ஆட்டோவில் இருக்கும் அன்பருக்கு வழி தோறும் நண்பர்கள் இருப்பதுண்டு. சொல்லி வைத்தாற் போல் ஒருவர் வழியில் ஏறி துணைக்கு வருவதுண்டு.
v அட்ரஸ் இல்லா தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்னு சும்மாவா பாடினாங்க.. எந்த ஏரியாவாக இருந்தாலும் தெள்ள தெளிவாக வழி, குறுக்கு வழி தெரிந்து விடுகிறது இவர்களுக்கு.
v பெரும்பான்மையானவர்கள் (நான் சந்தித்து பேசியது வரை) அவர்களின் சொந்த பகுதியை விட்டு வேறு பகுதியில் தான் ஆட்டோ ஓட்டுகிறார்கள்.
v கொஞ்சம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் நன்றாக பேசுவார்கள். சொந்த கதை சோக கதையாக இருக்கட்டும், அரசியல், ரோடு, சமூகம் இப்படி எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேசி விடுவார்கள்.
இப்படி நல்ல உள்ளம் படைத்த இவர்களிடம் மக்கள் குறைப்பட்டுக் கொள்ளும் சில காரணங்கள்..
v பேரம் பேசுவது. – அப்படியே இரண்டு மடங்காக பணம் கேட்பது
v இறங்கும் போது காசு அதிகமாக கேட்பது
v கொஞ்சம் அதிக தூரம் சென்றாலும் அதிக் பணம் வசூலிப்பது
v சாயங்காலம் அதிக நேரம் டாஸ்மாக்கில் செலவழிப்பது..
v அடி தடி அதிகம்..
தினம் தினம் நாம் சந்திக்கும் இது போன்ற மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் எப்போதாவது சிந்திக்கிறோமா? நம்மைப் போல ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு ஒவ்வொரு விஷயத்தில் பெரிய வியப்பாக இருக்கிறது..
இந்த தாம்பரத்தில் கிடைத்த அண்ணனும் அப்படித்தான்.. வழக்கமாக செல்லும் பாதையிலிருந்து அவர் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார்.. முதலில் ஒன்னும் சொல்லவில்லை என்றாலும் பாதை கொஞ்சம் குறுக ஆரம்பித்ததுமே .. ஏன் இந்த வழியில் போறீங்க என்று வினவினேன்.. இந்த கேள்வி நியாயமானது தான் என்று அறிந்த அவர்..
"பயப்படாதீங்க.. இது கொஞ்சம் குறுக்கவழி.. அந்த வழியில் போனா ரொம்ப நேரம் ஆகும்மா"
"அது சரி.. ஆனா இந்த ரோட் பாத்தாலே ஒரு மாதிரி இருக்கே.. "
"கவலைப்படாதம்மா.. என்னோட மூனு தங்கச்சியோட சேர்ந்து நீயும் எனக்கு ஒரு தங்கச்சி தான்" என்று ஆரம்பித்து தன் குடும்ப கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அப்பா அம்மாவை இழந்து, நிறைய சொத்து இருந்தும் மருத்துவ செலவிற்காக சொத்து இழந்து, தங்கைக்கு திருமணம் செய்து, கடைசியில் இருக்கும் ஒரே ஆட்டோவை வைத்து தான் பிழைப்பு. எல்லாரையும் கரை சேர்த்து சினிமாவில் சேரப் போவதாக சொன்னார்..
ஹீரோ வா போகப் போறீங்களா.. என்று நகைச்சுவையாக கேட்ட போது, கதை கவிதைகளில் இருக்கும் ஆர்வம் சொன்னார். தனியாக தான் தமிழ் இலக்கியம் படித்து முடித்ததாக சொன்னது தான் ஆச்சர்யம்.. இதை தவிர சுஜாதா புத்தகங்கள், கம்ப்யூட்டர், கவிதை, சினிமா என்று இவர் உலகம் இன்னும் படர்ந்து விரிந்தது. அவர் பேச பேச ஆச்சர்யம் தொடர்ந்தது.
இறங்கும் போது,
" உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் " என்றேன்..
அவர் சிரித்தார்.. பின்பு ..
" எந்த ஏரியாம்மா நீ "என்று வினவினார். சொன்னவுடன்.. அது ரொம்ப தூரம்மா.. சீக்கிரம் முடிச்சு பத்திரமா போங்க” என்று சொல்லி விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி சாலை கடக்க உதவினார். நாங்கள் மண்டபம் செல்லும் வரை எங்கள் வழி பார்த்தார்.
இது போன்ற சின்ன சின்ன உறவுகள் தான் வாழ்க்கையில் இன்பங்களை தெளிக்கிறது.
இந்த பதிவு : ஆட்டோக்கார அண்ணன்களுக்கு சமர்ப்பணம்..
சூப்பர் பதிவுங்க...எனக்கும் உங்களை போல அவர்களிடம் பேச்சு கொடுக்க பிடிக்கும்.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் நானும் கேட்டிருக்கிறேன்...
நீங்க சொல்ல மறந்த இன்னுரு விஷயம் "முக்கால் வாசி ஆட்டோக்காரர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்களே..." ;-)
உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.பழைய நினைவுகளை கிளப்பி விட்டுடுச்சி.சென்னையில இருந்தபோது எங்க ஏரியா ஆட்டோக்காரர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள்.
ReplyDeleteகொஞ்சம் எழுத்துப்பிழை வராம பார்த்துக்கிட்டீங்கன்னா போதும்.
சுயபுராணத்துல 'அதிகாம இல்லாமல் இருப்பினும்'னு
இருக்கிறதை 'அதிகம்'ன்னும்,இந்த பதிவுல
"இல்லைங்க .ஆட்டோ வேண்டாம்" என்று புண் சிரிப்போடு சொல்லி விடுவதுண்டு.."ன்னு இருக்கிறதை 'புன்சிரிப்போடும்'ன்னும் மாத்திடுங்க திவ்யா.
ஆட்டோக்காரர்களும் மனுசங்கதான். நல்லா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஅருமையான நடை. என் ஊரில் இருக்கும் நிறைய அண்ணன்கள் எனக்கு பழக்கம். என் பள்ளி நண்பர்கள் பலரும் இப்பொழுது ஆட்டோ ஓட்டுகிறார்கள். பலரும் பல கட்சியில் இருக்கிறார்கள். ஜாதி வித்யாசம் பார்க்காமல் திருமணமும் செய்து கொள்ளும் வழக்கம் அதிகம் இவர்களிடம். அருமையான பதிவுங்கக்கா .
ReplyDeleteநல்ல பதிவு திவ்யா
ReplyDeleteplease take out word verification ...
ReplyDeleteஎன்ன அழகான பார்வை?
ReplyDeleteஇதைப் போல் சாதாரண மக்களை அன்போடு நோக்கும் சமூகம் மட்டும் அமைந்து விட்டால் ஏற்றத் தாழ்வு ஏது?
இந்த ஆட்டோ ஓட்டும் மனிதர்கள் எல்லாமே தங்கள் தினப் போராட்டத்திற்கு மிகவும் சிரமப் படுபவர்கள். பெரும்பாலானவர் ஓட்டும் ஆட்டோகள் வாடகை வண்டிகளே.
இவற்றின் உரிமையாளர்கள் இவர்களிடம் பெறும் வாடகையின் காரணமே இவர்கள் நம்மிடம் கேட்கக் கூடிய மிக அதிக வாடகைக்கு காரணம்.
அருமையான பதிவு தோழி. என் பழைய சென்னை நினைவுகளை அசை போட வைத்து விட்டீஇர்கள்.
ReplyDeleteஎனக்கும் இது போல் நெயறைய அனுபவம் உண்டு.
--செந்தில்குமார்
சிங்கப்பூர்.
one in 100 will be like him. My exp is just opposite even i tend to behave with them with respect
ReplyDeleteஇன்னமும் இந்த மாதிரி சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அனால் மோசமான பலரால் இவர்களுக்கும் இன்று சமூகத்தில் கெட்டப் பெயர்..
ReplyDeleteஒழுங்கா Word Verification'அ முதல்ல தூக்குங்க..
ReplyDeleteஉங்கள் சிந்தனைகளில் வியக்கிறேன் ..
ReplyDeleteஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இவ்வாறு நின்று நிதானித்து சிந்திப்பது எனக்கும் பிடித்த விஷயம் ...
பதிவு அருமை .
நன்றி.
பதிவை படித்த பிறகு இந்த அறிவிப்பை கண்டேன். அருமை, வாத்துக்கள்!
ReplyDeleteபடித்தேன்,ரசித்தேன் நல்ல முயற்சி.. நல்ல பதிவு..
ReplyDeleteஅருமையான பதிவு திவ்யா... ரொம்ப ரசிச்சு படிச்சேன். பகிரத்தந்த விழியனுக்கு நன்றி
ReplyDelete//முக்கால் வாசி பேர் காதல் திருமணம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். அது எப்படி என்று என்னிடம் கேட்காதீர்கள். அடுத்த முறை நீங்கள் செல்லும் ஆட்டோவில் இதே கேள்வியை கேட்டுப்பார்க்கலாம்//
ReplyDeleteநல்லதொரு அனுபவப்பகிர்வுங்க. எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு. “கதல் கோட்டை” படத்தில் இது போன்றதொரு காட்சி உண்டு. அதன் தாக்கம் தான் எனக்கும் அப்படியொரு எண்ணத்தை தோற்றுவித்தது.
Hi Divya, unggal pathivugalai naan thaamathamaagathaan padithullen. neraiya yosikka vaikkirathu. yosippen. nandri.
ReplyDeleteஅட, அசத்திட்டீங்க ! எதேது, நான் உங்கள் எழுத்துக்களின் ரசிகன் ஆகிவேடுவேன் போலிருக்கே
ReplyDelete