Saturday, October 31, 2009

கிங்கினி முதல் கேள்விழி வரை.. முன்னுரை..

09 அக்டோபர் மாலை 7 மணிக்கு பரபரப்பாக இருந்தேன். 8 மணிக்கு மங்களூருக்கு செல்லும் ரயில். வீட்டிலிருந்தே கிளம்பவில்லை. நேரா ஆட்டோவிலேயே போயிடு என்று வந்த ஆலோசனையின் படி ஆட்டோவில் சென்றேன். எப்படி எப்படியோ குறுக்குவழியில் சென்று சென்ட்ரல் அடைந்தேன். ஆனால் ரயில் புறப்பட்டு இருந்தது. என்னுடைய மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு கிளம்பிய ரயிலை பிடிக்க முற்பட்டேன். அங்கே இருந்த ஒரு அதிகாரி, சிரித்துக் கொண்டே உங்களால பிடிக்க முடியாது என்று உண்மையை சொன்னார். இருந்தாலும் முயற்சி செய்து தோத்துப்போய் அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டேன். அம்மாவிற்கு சேதி சொன்னேன். பின்னர் எடுத்த டிக்கட்டை கேன்சல் செய்து, வீட்டிற்கு கிளம்பினேன். பூந்தமல்லிக்கு செல்லும் பேருந்தில் ஏறி (போரூர் வழியாக செல்லும் என்ற நம்பிக்கையில்) அது கோயம்பேடு, மதுரவாயிலாக செல்லும் பேருந்து. கடைசியில் வீட்டிற்கு சேர்ந்தது மணி 10.30.

என்னால் நம்பவே முடியாதது இதில் ஒரு கட்டத்தில் கூட நான் அழவே இல்லை. மனதிற்குள் கூட ஒரு விசும்பல் இல்லை. என்னமோ சரி நடந்தது நடந்திருச்சு என்று சாதாரணமாக இருந்து விட்டேன். அடுத்த நாள் ரிசர்வ் செய்யாமல் கிட்டதட்ட 17 மணி நேரமும் பயணம் செய்தும் (அதுவும் பல TTR இடம் திட்டு வாங்கி வாங்கி) மணம் எப்போதும் சஞ்சலப்படவே இல்லை. என்னடா இது நாம என்ன திருந்திட்டோமா என்ற ஆச்சர்யம் பல நாட்கள் இருந்தது.

தர்மஸ்தலாவில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன். 25ம் தேதி பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் எவ்வளவோ எதிர்ப்பார்ப்புகளுக்கு நடுவில் வருவது தான் பிறந்த நாள். எல்லாரும் நமக்கு வாழ்த்து தெரிவிக்கணும், யாராச்சும் பரிசு கொடுக்கணும், புது டிரஸ் போட்டுக்கணும் எல்லாம் வழக்கமான ஆசைகள் தான். பள்ளிக்காலங்களிலும் சரி கல்லூரி காலங்களிலும் சரி பொதுவான விடுமுறை நாட்களிலேயே எனது பிறந்த நாள் வந்து போய்விடும். அதனால் நண்பர்களோடு கொண்டாடிய பிறந்த நாள் மிகவும் குறைவே. அதுவும் எனக்காக கேக் வெட்டி கொண்டாடியது எல்லாம் அலுவலகம் சேர்ந்த பின்னரே.

இந்த முறை அதிசியமாக அப்படி எந்த ஒரு சலனமும் இருந்ததாக தெரியவில்லை. கைபேசியை அனைத்து விட்டு தூங்கினேன். கேக் எல்லாம் வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வருடத்தில் இருக்கும் மற்ற சாதாரண நாள் போலவே இருந்தது என்னுடைய பிறந்த நாள். “Birthday Special” என்ற ஒன்று இல்லாமலே போய் விட்டது. (வழக்கமாக அம்மா செய்யும் கேசரி உட்பட) . அலுவலகத்தில் மட்டும் எனக்காக சர்ப்ரைஸ் கேக்.



எப்ப பார்த்தாலும் பாங் பாங் குய்யோ முய்யோ – என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் மண்டைக்கும் அவ்வப்போது எட்டிப்பார்த்து கொண்டிருக்கும் அமைதியும் சாந்தமும் கூட கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.

யாரோ உனக்கு இப்போ எவ்வளவு வயசாகுது என்ற கேள்வி தான் ஓங்கி மண்டையில் அடித்து உண்மையை விளக்கியது. 25 வயது முடிந்து விட்டது. 26ற்கு அடி எடுத்து வைத்தாகி விட்டது. நான் பார்த்து பார்த்து வளர்ந்துக்கிட்டு இருக்க பொண்ணு. 7 கழுதை வயசாகிடுச்சு. முளைச்சு 25 இலை விட்டாச்சு. இனிமே நாம பக்குவமா நடந்துக்கனுமோனு எல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

எப்போதாவது நான் எனக்குள்ளே பேசிக்கொள்ளும் தருணங்களில் எழுதனும்னு தோன்றிய ஒரு தொடர் தான் ‘கிங்கினி முதல் கேள்விழி வரை’. எனது இந்த 25 வருட வாழ்க்கையில் (என்னமோ 60 வயது மாதிரி பேசறேன்னு தெரியுது) நான் சந்தித்த அனுபவங்கள், மனிதர்கள், பயணங்கள் பற்றிய தொகுப்பு தான் இந்த தொடர். ‘கிங்கினிக்கு புங்கினி’ தான் என் அப்பா எனக்கு வைத்த செல்ல பெயர் சின்ன வயதில். கேள்விழி என்பது என்னுடைய இன்னுமொரு புனைப்பெயர் – நானே வைத்துக் கொண்டது.

இனி அனுபவங்களோடு சந்திப்போம்..

(இதுக்கா இவ்வளவு பில்டப்பு என்று சொல்பவர்களுக்கு பிரியாணி கேன்சல்)..

1 கருத்துக்கள்:

  1. இதுக்கா இவ்வளவு பில்டப்பு.... இப்டின்னு நான் சொல்லவே இல்ல..அதனால பிரியாணி பார்சல்! :-) :-)

    ReplyDelete