Thursday, June 3, 2010

குழலி பேரை சொல்லி...

குழலி (அண்ணன் மகளுக்கு இன்று முதல் பிறந்த நாள்).. ஊர்ல எல்லாரும் ஒரே கொண்டாட்டமா இருக்க.. முதல் முறையாக வீட்டு நிணைவுகள் வந்து கண்கள் கலங்க ஆரம்பித்தன.. சரி குழலி பேர் சொல்லி நண்பர்களுக்கு விருந்து வைக்கலாம் என்று முடிவு செய்தேன்.. ஆன்சைட்டுக்கும் ஆப்ஷோருக்கும் இருக்கும் பல வித்தியாசத்தில் முக்கியமான ஒன்று இங்க ட்ரீட் அதிகமா யாரும் கேக்கறது இல்லை.. அதே மாதிரி, அடிக்கடி நடக்கும் பாட் லக் அங்கு நடப்பதில்லை.. இந்த அனுபவங்கள் எல்லாமே ஒரு தனி இன்பம் தான்..

நண்பர்களுக்கு ஒவ்வொரு வாழ்க்கை தருணத்தில் ஒவ்வொரு பங்கு வகிப்பது உண்டு.. கல்லூரி காலங்களில் நண்பர்களே உலகமாக பலரும் திரிவதுண்டு.. என் நண்பனுக்காக உயிர் கூட தருவேன்னு அடிக்கடி சொல்லுவது இந்த காலக்கட்டத்தில் தான்.. பிறகு அலுவலக நண்பர்கள் பெரும்பாலும் கல்லூரி தோழர்கள் அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருப்பர்.. திருமணம் ஆன பிறகு எந்த நண்பராக இருந்தாலும் கொஞ்சம் தூரம் தான் சென்று விடுவதுண்டு.. வீட்ல அம்மணிய கவணிக்கவே நேரமில்லை என்று புலம்புவதுண்டு.. இல்லை எதாச்சும் பிரச்சனை போது உன் வீட்ல எப்படி என்று கேட்டு கொள்ள நிச்சயம் நண்பர்கள் தேவை. (நீங்க அப்படி இல்லை என்றால் சந்தோஷம்.. )

பெண்களுக்கு சமையல் குறிப்பு முதல் பார்லர் செல்வது, சீரியல் பற்றி பேசுவது என்று ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு தோழி இருப்பது வேற விஷயம்.. .

என்னை பொருத்த வரை, வீட்டை விட்டு, வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு, நண்பர்கள் குடும்பமாகவும் பங்கு வகிக்க வேண்டியுள்ளது.. எங்க போய் எங்க வந்தாலும் கடைசில இவங்க தான்.. இங்க ( ஆன்சைட்ல).. என் வாழ்க்கை.. என் வீடு. என்று தனித்து வாழ்வது அவசியமற்று போகிறது..

யாருக்கு என்ன விசேஷமென்றாலும் ஒன்றாக கூடி அமர்ந்து பேசி, ஒன்றாக சாப்பிடும் இன்பமே அலாதி தான்..

அப்படி இங்கு குடும்பமாக இருக்கும் சில நண்பர்களை இன்று விருந்திற்கு அழைத்திருந்தேன்.. வீட்ல இருந்த போது சமையலறை கூட எட்டி பார்த்தது இல்லை.. இங்கு வந்து வேற பொழப்பு இல்லாமல் சமையல் செய்ய ஆரம்பித்து, ஒரு அளவுக்கு தேறி விட்டேன்.. கொரியன் டிராமா Gourmet பார்த்ததில் இருந்து சமையல் என்பது உணவு என்பதை மீறி பல உணர்வுகளை பொதித்து வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்..

உதாரணத்திற்கு புளி சாதம் என்றாலே எனக்கு பெரியம்மா தான் நினைவிற்கு வருவாங்க.. அவங்களை மாதிரி யாருமே அதை செய்ய முடியாது.. சிலருக்கு கோயில் புளிசாதம் ரொம்ப பிடிக்கும்.. இப்படி ஒவ்வொரு உணவுகளிலும் ஒவ்வொரு நிணைவுகள் பொதிந்து இருக்கும்..

இப்படியாக சமையல் மீது ஒரு ஈடுபாடு வந்து அதை ரசித்து செய்ய ஆரம்பித்தேன்.. ஆர்க்குட்டில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியும்.. சதா நான் செய்யும் உணவுகளை புகைப்படம் எடுத்து ரகளை செய்து கொண்டிருந்தேன்.. பலரின் வேண்டுகோளின் பேரில்.. அதை தற்காலிகமாக நிறுத்தியிள்ளேன்..

சரி நீங்க அப்படி பாத்து தான் ஆகனும்னு அடம்பிடித்தால்.. பார்க்க..

சமையல் செய்வது என்றாலே இப்போது எனக்கு ஒரு தனி குதூகலாம் தான்.. ஆனால் இன்று ஒரு விசேஷம்.. முதல் முறையாக சிக்கன் செய்யலாம் என்று இருந்தேன்..

நேற்று இரவு இதற்காக வால்மார்ட் சென்றோம் நானும் எனது அறைத்தோழியும்.. ஊர்ல பொதுவாக கறி-ன்னா ஒரே அர்த்தம் தான்.. ஆனால் இங்கு,.. தொடை, மார்பு என்று தனித்தனியாக பேக் செய்யப்பட்டு இருந்தது.. சரி ஏதோ ஒன்று எடுத்து கிளம்பினோம்.. அலுவலகத்திலிருந்து வந்த உடனே வேலை ஆரம்பித்தாயிற்று.. நேற்று இரவே அம்மாவிடமிருந்து ஒரு தடவை செய்முறை கேட்டுக்கொண்டேன்.. என்ன தான் ஆன்லைன்ல ஆயிரம் செய்முறை விளக்கங்கள் இருந்தாலும் அம்மா சொல்ற மாதிரி வருமா..

முதல் சவால்.. கொழுப்பு எடுப்பது தான்.. எனக்கு இருக்க கொழுப்பு இல்லை.. அது வேற கதை.. சிக்கன் கொழுப்பு எடுப்பதற்கே படாத பாடு பட்டேன்.. அப்படியே கசல் (ghazal) பாடல்கள் கேட்டுக்கொண்டே செய்தது புது வித அனுபவம்.. அப்படியே பல நினைவுகள் வந்து எட்டிப்பார்த்தன..

முதலில் நினைவிற்கு வந்தது கல்லூரி தோழி லாவன்யா.. “உனக்கு கறி செஞ்சு போடறேண்டி” – எதாவது தாஜா செய்யனும்னா அடிக்கடி இதை சொல்லுவாள்.. அப்புறம் சுரேன் அண்ணா.. அவர் செய்த சிக்கன் பிரியாணி சாப்பிட்டது இல்லை.. ஆனால் அண்ணாவும் அவனது நண்பர்களும் அடிக்கடி அவர் பெருமையை அங்கலாய்ப்பதுண்டு..

பிறகு காட்பாடியில் இருக்கும் பாய் கடை.. நமக்கு இவ்வளவு ப்ராசஸ் செய்த கறியை வெட்டவே ஒரு மாதிரி இருக்கே.. உயிரோடுள்ள கோழியை எப்படி வெட்டுவார் அவர்.. என்று புதுப்புது கேள்விகள்.. ரொம்ப ரொம்ப வருடங்களுக்கும் முன்னர் சிக்கன் எடுக்க அம்மாவோடு சென்றதோடு சரி.. சிக்கன் வெட்டுவதை பார்த்தால் சாப்பிட தோன்றாது என்று சிலர் சொல்லுவதுண்டு..

பிறகு ஒவ்வொரு சதை அறுக்கும் போதும் அதை கோழியோடு பொருத்தி பார்த்தேன். சிக்கனுக்கும் உறவுகளில் ஒரு பெரிய பங்கு இருக்கு.. கிராமத்தில் இருக்கும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சென்ற போது.. அவங்க அம்மா சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது..

“புள்ளைங்கள்லாம் வந்து இருக்கீங்க.. மனசார ஒரு நாலு கோழி அடிச்சு குழம்பு வைக்கனும்.. நல்லா சாப்பிடறத கண் குளிர பார்க்கனும்..”

பலருக்கும் விருந்து என்றாலே நிச்சயம் கோழி இருக்கனும்.. அது எப்படி வந்ததோ.. அதுக்கு ஒரு தனி மரியாதை தான்.. புது மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தால்.. ஹ்ம்ம்ம் அசத்தலா இருக்காதா கோழி குழம்பு..

இப்படியாக எங்கெங்கோ சுற்றித் திரிந்த எண்ணங்கள்.. நானும் முதல் முறையாக கோழி செய்ய நினைத்தது.. எனக்கு தம்பி போல இருக்கும் ஒரு நண்பனுக்காக..

பிறகு இட்லி, தோசை, சாதம் என்று அறைத்தோழியின் உதவியுடம் எப்படியோ சமாளித்தாயிற்று.. அது மட்டுமல்லாமல்.. இன்னொரு நண்பனின் மனைவியும் சிலவற்றை செய்து எடுத்து வந்ததால்.. சின்ன விருந்து சிறப்பாக இருந்தது.. இட்லி, தோசை, முட்டை தோசை, சிக்கன் குழம்பு, சாம்பார், சாதம், ரசம், உருளை பொரியல்.. கடைசியில் நிறைவிற்காக பாதாம் பால்.. போதாதா என்ன.. சிக்கன் வெந்துச்சா வேகலையா என்ற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.. “திவ்யா சிக்கன் சூப்பர்.. “ நண்பன் பிரவீனின் முதல் பாராட்டு, அப்பாடி என்று இருந்தது.. எப்போதுமே அவன் சாப்பிட்ட உடனே பாராட்டுவதுண்டு.. அது எவ்வளவு மகிழ்ச்சியை தருகின்றது..

திருப்தியாக சாப்பிட்ட எல்லோரும் சாப்பிட்ட பின்னரும் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து பேசி அரட்டை அடித்தோம்.. அந்த திருப்தி இருக்கே.. பிறகு அனைவருக்கும் ஆப்ஷோர் கால் வர ஆரம்பிக்க… கூட்டம் கலைந்தது..

பொதுவாக அம்மா சாப்பாடு மட்டும் ஏன் அத்தனை ருசி தெரியுமா .. அதனோடு கலந்து இருக்கும் அன்பு.. எல்லாம் தெரிந்த விஷயம் தான்.. சமீபத்தில் இந்த அடிப்படையில், ஈடுபாடுடன் சமைக்க ஆரம்பித்தேன்.. மனதில் மகிழ்ச்சியுடன் உணவு செய்யும் போது, நிச்சயம் அதற்கு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது.. அன்பிற்க்கே உரித்தான ருசி அது. அப்படி என் அன்பின் அபிமானம் பெற்ற தற்போது எனக்கு குடும்பமாக இருக்கும் எல்லா நண்பர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..



6 கருத்துக்கள்:

  1. ம்ம் குட்டிப்பொண்ணு குழலியின் பிறந்த நாளில் எங்களுக்கெல்லாம் நல்லதொரு விருந்து(பதிவு)வைத்த வித்யா அத்தையே வாழ்க வாழ்த்துகள்!

    குழலியின் பாட்டி(அண்ணனின்)மீனாம்மா :))

    ReplyDelete
  2. என் இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  4. நானும் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete